About Us

Sudalai Andavar

சிறுமளஞ்சி சுடலை ஆண்டவர் வரலாறு

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ( 1 ) கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோயில்.

காவல் தெய்வங்களில் முதன்மையானவராக கருதப்படும் சுடலைமாடன் லிங்க வடிவில் சுயம்புவாக மூவாற்றங்கரையினிலே சீவலப்பேரியிலே தோன்றினார். அடைபட்ட சிமிழாய், அய்யன் திருக்கோட்டியப்பரால்

அடையாளம் காட்டப்பட்டார் ஊர்க்காட்டில், தாமிரபரணியிலே வாடிய மலர்மாலையாய் வந்து சிறுவர்களிடத்தில் திருவிளையாடல் நிகழ்த்தி இரட்டை சுடலையாய் மேல கோயிலிலும், வேப்ப மரத்தின் அடியில் ஓங்கி உயர்ந்த புற்றாய் வேம்படிமாடனாய் கீழக் கோயிலிலும் ஆறுமுகமங்கலத்தில் எழுந்தருளினார்.

பக்தனுக்காக கோர்ட்டில் சாட்சியும் கூறி, ஐகோர்ட் மகாராசாவாக அழைக்கப்பட்டார். வாங்கிய மாடுகளுக்கு கொடுக்காத பணத்தை கொடுத்ததாக பொய் சத்தியம் செய்ததால், மாடுகளுடன் வந்து பொய் சத்தியம் செய்தவரை பழி தீர்த்து தான் யார் என்பதை காட்ட ஒத்தப்பனையில் காட்சி கொடுத்தார் விஜயநாராயணத்தில். ஓரினத்தானுக்குள் உருவான பகைக்காக பொய் சத்தியம் செய்ததால் ஒத்தப்பனை உயரத்திற்கு ஒளியாய் ஜொலித்தார் சிறுமளஞ்சியிலே. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் தளபதி சமுத்திரம் கீழுர் அருகே நம்பி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது இயற்கை வளமான கிராமம் திருவேங்கிடநாதபுரம் என்ற சிறுமளஞ்சி. இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த இருளப்பன் நாடார் என்பவருக்கும் அருகேயுள்ள கிராமமான அணைக்கரையைச் சேர்ந்த வெள்ளையன் நாடாருக்கும் பனை மரங்களை குத்தகைக்கு எடுப்பதில் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் வெள்ளையன் நாடாருடைய களத்துமேட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் தீ பற்றி எரிந்தது. அதை இருளப்பன்தான் செய்தார் என்று வௌ்ளையன் குற்றம் சாட்டினார். இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரண்டு ஊர் பெரியவர்களும் பேசி முடிவெடுத்தனர். முடிவில் சத்திய தெய்வம் அந்த சங்கரனாரின் அவதாரமான மாயாண்டி சுடலை அருளாட்சி புரியும் விஜயநாராயணத்தில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலுக்கு இரு ஊராரும் செல்லவேண்டும். கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யலாம் என்று முடிவு செய்தார்கள். சத்தியம் செய்த பிறகு சொந்த ஊருக்கு மூன்று நாட்கள் கழித்துதான் வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.

அதன்படி இரு ஊராரும் விஜயநாராயணம் சென்றார்கள். அங்கே கோயிலில் சத்தியம் செய்தார்கள். ஆனால், மூன்று நாட்களுக்குள் ஊருக்கு திரும்பக்கூடாது என்ற உத்தரவை மீறி சத்தியம் செய்த அன்றே சிறுமளஞ்சிக்காரர்கள் ஊருக்கு திரும்பி விட்டார்கள். மாயாண்டி சுடலை தனது திருவிளையாடலை நிகழ்த்தலானார். ஒரே நாளில் ஆறு பேர் அவரது திருவிளையாடலில் சிக்கிக் கொண்டனர். மறுநாள் ஆறு பன்னிரெண்டாக உயர்ந்தது. அன்றிரவு சிறுமளஞ்சி நாடார் தெருவிலுள்ள ஒரு பெண்ணின் கனவில், பேச்சி மகன் மாயாண்டி சுடலை, ஓங்கி உயர்ந்த ரூபம் கொண்டு, விரிசடை தலையோடும், விரிந்த தோள்கள் இரண்டில், இரண்டு பனை மரங்களை வைத்துக்கொண்டு, கையில் மாண்டுபோன பிணங்களின் முட்டங்கால்களை முருக்குபோல கடித்துக்கொண்டு, ஆங்கார ரூபத்தோடு ஆதாளி போட்டபடி, இடுப்பில் கருப்பு நிறத்தில் மணி கச்சம் (சல்லடை) அணிந்து, காலிலே வெள்ளி மணி தண்டையும் அணிந்து, ஒரு கையில் அஞ்சு மணி வல்லயமும் கொண்டு வருவதைப்போன்று தோன்றினார். திடுக்கிட்டு விழித்த அப்பெண் தனது தாய், தந்தையரிடம் தான் கண்ட கனவு பற்றி கூறினாள். அவர்கள் அதை ஊர் பெரியவர்களிடம் கூறினர். ஊர் பெரியவர்களில் ஒருவர் ‘‘சரி, நாளைக்கு கடைசி செவ்வாய், நம்ம முத்தாரம்மன் கோயிலில் கணக்கு கேட்டிருவோம். அம்மன் என்ன சொல்லுகாளோ அதுபடி அடுத்து செய்ய வேண்டியது பற்றி யோசிப்போம்’’ என்றுரைத்தனர். கடைசி செவ்வாய் இரவு எட்டு மணியளவில் சிறப்பு பூஜை நடந்தேறியது. அப்போது அம்மனுக்கு சாமியாடுபவரிடம், ஊர் பெரியவர்கள், நடந்ததை கூறி இனி என்ன செய்யலாம் என்று கேட்டனர். அப்போது அம்மன் கொண்டாடி ‘‘என் மைந்தனவன் மாயாண்டி சுடலைக்கு மனக்கோபம் தீரலையே, ஊருக்குள் இறங்கி வாரான். அவன் கோபம் தணிந்திட, ஊரில் அவனுக்கு நிலையம் கொடுத்து கோயில் எழுப்பி, பூஜித்து கை எடுத்து வணங்கி வாங்க, சிவ சுடலை அவன், சினம் தணிவான், கயிலையில் பிறந்த மவன், காவலாய் காத்து நிப்பான்.

இன்னிக்கு ராத்திரியே அவன் வருவான். நள்ளிரவில் வடக்கே முச்சந்தியில் இருக்கிற ஒத்தப்பனை மரத்து மேல சுடரொளியிலே அவதரித்தவன், பேரொளியாய் தெரிவான்.’’ என்றதும், குறுக்கிட்ட பேசிய ஒருவர். ‘‘சரிம்மா, அந்த பனங்காட்டுல எந்தப் பனைனு கண்டுபிடிக்க’’ என்று கேள்வி எழுப்பினார். ‘‘சுடலை ஒளியாய் தெரியும் அந்தப்பனை மரத்து அடியில் கத்தரிக்காய் செடி ஒண்ணு இருக்கும். ஒரே ஒரு காய் அதுல காய்ச்சிருக்கும். அந்த இடம்தான் சுடலை குடியேற விரும்புற இடம். அவனை கண்டு யாரும் அஞ்ச தேவை இல்லை. அவன் என் எதிரில் என் கண் பார்வையில் என் கட்டுக்குள் இருப்பான்’’ என்றது முத்தாரம்மன் அருள்வாக்கு. அதன்படியே நள்ளிரவில் ஊரார்கள் கூடி நிற்கிறார்கள், மாயாண்டி சுடலை, விஜயநாராயணம் விட்டு, பரப்பாடி, புதுக்குளம், இறப்பாரி பாதைவிட்டு, நாங்குநேரி தாண்டி வாகைக்குளம் வழியாக சிறுமளஞ்சி வந்தாரே சிவசுடலை. பெருவேம்புடையார் சாஸ்தா கோயில் பாதை கூடி, ஐந்து கண் பாலம் கடந்து சிறுமளஞ்சி ஊருக்குள் வந்தார். ஒத்தப்பனை உயரத்துக்கு ஔியாய் காட்சி தந்தார் சுடலை ஆண்டவர்.


மறுதினமே ஊர் பிரமுகர்கள் விஜயநாராயணம் சென்று பிடிமண் எடுத்து வந்தார்கள். கத்தரிச்செடி முளைத்திருந்த ஒத்தப்பனை அடியில் சுடலைக்கு மண் பீடம் அமைக்கப்பட்டது. பனை ஓலையால் கொட்டகை அமைத்து கோயில்கட்டி பூஜை செய்து வந்தனர். சுடலை ஒருவர்மேல் இறங்கி, கோபம் தணிந்தது. இந்த சிறுமளஞ்சியை சிறுமதுரையாக்கி தருகிறேன் என்று முதல் வாக்கு கொடுத்தார். அதன் பின்பு சில வருடங்கள் கழித்து கல்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பனை கம்பு மூலமாக ஓடு வேயப்பட்டது. பின்னர் ஓட்டுக் கூரையை நீக்கிவிட்டு கல் மண்டபம் நிறுவப்பட்டது. ஆண்டவர் சுடலையின் வாக்கின்படி சிறுமளஞ்சி, விவசாயத்திலும், தொழிலிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது.

தினமும் காலை 6.30ல் இருந்து இரவு 8.30 வரை நடை திறந்து இருக்கும். நுழைவு வாயில் அருகே ஒற்றை பனை மரமும், அருகே கொம்பு மாடசாமி பீடமும் உள்ளது. எதிரில் சுடலை சந்நதி. பெருமாள் சுவாமி விளக்கு பீடமும் பிரம்மராக்குசக்தி அமர்ந்த நிலையிலும், சுடலை, பேச்சியம்மன், முண்டன் ஆகியோர் நின்ற நிலையிலும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

சுடலையின் கோயில்களில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் மூலவர் ‘‘சுடலை ஆண்டவர்’’ என்று அழைக்கப்படுகிறார். உண்மையாக உள்ளம் உருக வழிபடும் அன்பர்களுக்கு உயர்வான வாழ்வு தருகிறார் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர். இக்கோயில் வள்ளியூரிலிருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ளது. இக்கோயிலில் இரண்டு ஆண்டுக்கொருமுறை ஆவணி மாதம் 2019 3வது வெள்ளிக்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. வரும் ஆவணி மாதம் கொடைவிழா நடைபெற உள்ளது. வியாழக்கிழமை மாலை குழயழைப்புடன் தொடங்கும் கொடைவிழா, சனிக்கிழமை பொங்கலிடுதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடும், தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடும் நடக்கிறது. இதற்காக வள்ளியூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.